முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை :ஜெயலலிதா வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், மருத்துவமனைக்கான இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து தமக்கு கடிதம் வந்திருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல் கட்டத்திலேயே தமிழகத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறிய ஜெயலலிதா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 5 இடங்களிலும் போதுமான தண்ணீர், மின்சாரம் உள்ளதாகவும், ரயில் மற்றும் விமானம் மூலம் எளிதாக செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான வசதி பெருகும் என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்திய பெருமை தமிழகத்திற்கு இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் நடப்பாண்டே எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்