முக்கிய செய்திகள்:
சமஸ்கிருத வார விழாவை ஏற்க முடியாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளி கல்வித் துறை செயலாளர், அனைத்து மாநில செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ஆகஸ்டு மாதம் 7–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறேன்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள மத்திய கல்வி கழகம் (சி.பி.எஸ்.சி.), கேந்திரிய வித்யாலயா (கே.வி.) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் கழகம் ஆகியவை இந்த சமஸ்கிருத வாரத்தை கொண்டாடும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் மாநில அரசுகளும் அத்தகைய சமஸ்கிருத வாரத்தை மாநில, மாவட்ட, மற்றும் கீழ்மட்ட அளவில் கொண்டாட அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில், பழமையான தமிழ் மொழியானது வளமான கலாச்சார சிறப்புக் கொண்டது என்பதை தாங்கள் அறிவீர்கள். அது போல தமிழ்நாட்டில் வலுவான சமூக நீதி மற்றும் மொழி இயக்கம் இருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.எனவே தமிழ்நாட்டில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தம் இல்லாதது. அதை ஏற்க இயலாது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப, அந்த மாநில செம்மொழி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வதே மிக, மிக பொருத்தமானதாக இருக்கும்.அந்தந்த மாநில மொழி மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்ப கொண்டாட்டம் நடத்த கடிதத்தில் தேவையான மாற்றங்கள் செய்ய மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தந்த மாநில மொழி, கலாச்சார கொண்டாட்டமானது, அந்த மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளிகள் உள்ளடக்கிய அனைத்து கல்விக் கூடங்களிலும் நடைபெற வேண்டும்.இதுதான் நம்மை போன்ற மாறுபட்ட கலாச்சாரம், மொழித் தொன்மை கொண்ட நாடுக்கு பொருத்தமானதாக அமையும்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்