முக்கிய செய்திகள்:
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த நீதி: சட்டபேரவையில் முதல்வர் பெருமிதம்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி, 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தமிழக அரசு எடுத்த திடமான, உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த நியாயமான தீர்ப்பினையடுத்து, மத்திய அரசின் ஒத்துழைப்போடு நேற்று, அதாவது, 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழு எடுத்த முடிவினை அடுத்து; அடைப்பான்கள் கீழ் இறக்கப்பட்டன. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி; தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி.

இந்த நடவடிக்கை மூலம் 37 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எனது அறிவுரையின் பேரில், எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களை அடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும்; அணையினை பலப்படுத்தும் எஞ்சிய பணிகளை மேற்கொள்ளலாம் எனவும்; இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசுக்கு கேரள அரசு

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் 27.2.2006 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பலப்படுத்தும் பணிகள், மத்திய நீர்வளக் குழுமம் கூறியபடி முடிக்கப்பட்டவுடன் தனிப்பட்ட நிபுணர்கள் மேற்கொண்டு ஆய்வு நடத்தி, அணையின் நீர்மட்டத்தை உச்சமட்ட நீரளவான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், கேரள அரசு, 2003ம் ஆண்டு கேரளா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இந்த திருத்தச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உச்ச மட்ட நீரளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கேரளா அரசின் இந்த சட்ட திருத்தம் செல்லத்தக்கது அல்ல என உத்தரவிடக் கோரி 31.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசமைப்பு பிரிவு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களை தலைவராக கொண்டு; 5 நபர்களை கொண்ட ஒரு அதிகாரம் படைத்த குழுவினை அமைக்க உத்தரவிட்டது.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி இந்த குழுவில் தமிழகம் இடம்பெறாது என அறிவித்தார். தமிழகத்தின் சார்பில் இந்தக் குழுவில் பிரதிநிதியை நியமித்தால் தான் தமிழகத்தின் நலனை காப்பாற்ற முடியும் என நான் அறிக்கை வெளியிட்ட பின் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு நியமித்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு முன்பு தமிழக அரசின் சார்பில் நியாயமான, வலுவான, திறமையான வாதங்கள் வைக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டும்; ஆய்வுகளின் அடிப்படையிலும்; அதிகாரம் படைத்த குழு தனது அறிக்கையினை 25.4.2012 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்களை கொண்ட அரசமைப்பு அமர்வு தனது தீர்ப்பினை 7.5.2014 அன்று வழங்கியது. இந்த தீர்ப்பில், தமிழ்நாடு தாக்கல் செய்த சிவில் வழக்கு தீர்ப்பாணை அதாவது, னுநஉசநநன ஆக்கப்பட்டது. கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று உத்திரவிட்டதோடு; உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு கேரள அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணி மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும், கேரள அரசின் அச்சங்களில் உண்மை ஏதுமில்லை என்றாலும்; மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூவர் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு பாரதப் பிரதமரை 3.6.2014 அன்று நான்நேரில் சென்று, டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்ததோடு; அதில் உள்ள அம்சங்களை மா பிரதமருக்கு விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்கூறினேன். கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட பிரதமர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கேற்ப மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான ஆணையை 1.7.2014 அன்று

மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணை கிடைக்கப் பெற்றவுடன்; மேற்பார்வை குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டுமென்று மேற்பார்வைக் குழுவின் தலைவரை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், இந்தக் குழுவின் முதல் கூட்டம் 8.7.2014 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேற்பார்வைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று, அதாவது, 17.7.2014 அன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு; அவ்வாறு 142 அடி வரை நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அடைப்பான்கள் நேற்றே இறக்கப்பட்டன. தி.மு.க தலைவர் திரு. கருணாநிதி, மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் இனி என்ன செய்யப் போகிறது இந்த அரசு?என்ற தலைப்பில் மேற்பார்வைக் குழுவின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கேரள அரசு கேட்டுள்ளதே என்று உண்மைக்கு மாறாக தெரிவித்து; தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறது? என்று கேள்விக்கணையும் தொடுத்திருந்தார்.

அதற்கு நான் கேரள அரசு தடை கோரி எந்த மனுவினையும் தாக்கல் செய்யாத போது; கேரள அரசை தூண்டும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதை கண்டித்தேன். மேலும் தமிழகத்திலே திறம்பட செயல்படும் அரசு இருப்பதால் தான், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கப்பெற்றது; மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது; மேற்பார்வைக் குழுக் கூட்டத்திற்கான நாளும் குறிக்கப்பட்டுவிட்டது; விரைவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக நிச்சயம் உயர்த்தப்படும்" என்று தெரிவித்து இருந்தேன்.

நான் தெரிவித்து இருந்ததைப் போலவே, நேற்று அணையின் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, கிடைத்த வெற்றி. வெற்றி என்பதை விட இது தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும் செய்திகள்