முக்கிய செய்திகள்:
ஸ்மால் பஸ் மூலம் ரூ.1.58 கோடி வருமானம் : அமைச்சர் தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில் வருமாறு:–

முதல்– அமைச்சர் அம்மா சென்னை நகரில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத இடத்துக்கு ஸ்மால் பஸ்களை இயக்கும் சிறந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 15–ந்தேதி வரை சென்னையில் ஸ்மால் பஸ்கள் மூலம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 88 ஆயிரத்து 532 வருமானம் கிடைத்துள்ளது. ஒரு ஸ்மால் பஸ்சில் தினமும் 775 பேர் பயணம் செய்கிறார்கள். இது தவிர ஒரு மாநகர பஸ்சில் தினமும் 1022 பேர் பயணம் செய்கிறார்கள்.

விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள்: அமைச்சர் காமராஜ் தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:–

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதி உள்ள அனைவருக்கும் 2 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. முறையான ஆவணங்கள் வழங்கிய அனைவருக்கும் குறிப்பிட்ட நாளில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் 2 அல்லது 3 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்கு தகுந்த ஆய்வு செய்த பிறகு தகுதி இருந்தால் ரேஷன் கார்டு வழங்கப்படும். ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக சென்னை மாவட்டத்தில் மாதத்தின் 2–வது சனிக்கிழமைகளிலும், மற்ற மாவட்டங்களில் மாதத்தின் 2–வது வெள்ளிக்கிழமைகளிலும் குடும்ப அட்டைதாரர் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்கள் அளிக்கும் மனுக்கள் காலவரம்புக்குள் தீர்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்