முக்கிய செய்திகள்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்பயா ஆதரவு மையம் அமைக்கப்படும்: மேனகா காந்தி

சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் இந்தியாவின் தெய்வீக தாவரங்கள் என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்விமைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தலைமை தாங்கினார். சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்விமையம் தலைவர் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், கவுரவ செயலாளர் எம்.பார்கவி தேவேந்திரா,

கவுரவ இயக்குநர் மற்றும் நூலாசிரியர் நந்திதா கிருஷ்ணா, சுற்றுச்சூழல் கல்வி அலுவலர் எம்.அமிர்தலிங்கம், சென்னை புத்தக மைய உறுப்பினர் எஸ்.ஆர்.மது, பென்குயின் புத்தக இந்தியாவின் சென்னை உறுப்பினர் காமினி மகாதேவன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘இந்தியாவின் தெய்வீக தாவரங்கள்’ நூலின் முதல் பிரதியை மத்திய மந்திரி மேனகா காந்தி வெளியிட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி பேசியதாவது:-

நம் நாட்டில் நிறைய தாவரங்கள் புனிதமானதாக கருதப்படுகின்றன. இந்து சமயத்திலும் தாவரம், விலங்கு, கற்கள் ஆகியவற்றை புனிதமாக கருதுகிறார்கள். முந்தைய காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுபகாரியங்கள் மற்றும் பிறகாரியங்களுக்காக செல்வார்கள்.

அப்போதெல்லாம் வெளி இடங்களில் தங்குவதற்கு உணவு விடுதிகள் என்பதெல்லாம் கிடையாது. அந்த சமயங்களில் கோவில்களில் தான் தங்குவார்கள். அப்போது அவர்கள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடுவார்கள்.

ஆனால் தண்ணீர் குடிப்பதற்கு கோவிலுக்கு வெளியில் செல்ல வேண்டும். அங்கு விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே வெளியில் செல்லமாட்டார்கள். அந்த சமயத்தில் கோவில்களில் இருக்கும் துளசி செடியை சாப்பிட்டு தாகத்தை தீர்த்துக்கொள்வார்கள்.

ஆனால் காலப்போக்கில் துளசி புனிதமானதாக தற்போது கோவில்களில் கருதப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டால், அவர்களின் கவனம் முழுவதும் வனத்துறை பக்கம் சென்றுவிடுகிறது.

காரணம் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்டி அதை பணம் ஆக்கிவிடுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்களை வெட்டுகிறார்கள்.

இதை வைத்து பார்க்கும்போது, எதிர்காலத்தில் நாம் மரங்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்த மரங்களை வெட்டுபவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மேனகா காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘நிர்பயா ஆதரவு மையம்’ அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.ஆனால் மாநில அரசி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘நிர்பயா ஆதரவு மையம்’ அமைக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுப்பதற்கும், சட்ட ஆலோசனை, உளவியல் ஆலோசனை, மருத்துவம், காவல்துறை உதவி போன்ற வசதிகள் இந்த ஆதரவு மையத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்