முக்கிய செய்திகள்:
சட்டப்பேரவையில் திமுகவினர் வெளியேற்றம்

தமிழக சட்டசபை நேற்று (வியாழக்கிழமை) கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச வாய்ப்பு கேட்டார். தேமுதிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உறுப்பினர்களும் அதே பிரச்சினை குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கோரினர்.

அப்போது பேரவைத் தலைவர் ப.தனபால், இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப இயலாது என்றார்.இப்பிரச்சினைக்கு எனது பதிலுரையில் விளக்கம் அளிக்கிறேன். தைரியம் இருந்தால் அதைக் கேட்டுவிட்டு, வெளிநடப்பு செய்யுங்கள் என அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

ஆனால், தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டபடி இருந்தனர். பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் திமுக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மமக, புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வரிசையாக வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, நான் பதில் சொல்கிறேன் என்று சொல்லியும் ஓடுகாலிகளைபோல் ஓடுகிறார்கள் என்றார்.இந்நிலையில் இன்று அவை கூடியபோது, வைத்திலிங்கத்தின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து கூச்சலிட்டனர்.இதனையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி திமுகவினரை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து, அவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சைக் கண்டித்து தேமுதிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.ஆட்சி நிர்வாகத்தில் தரம் தாழந்த அதிமுக சட்டசபையிலும் தரம் தாழ்ந்து விட்டது சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்: ஓடுகாலிகள் என்ற வார்த்தை சட்டசபை மரபுக்கு எதிரானது. சட்டசபையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வது ஜனநாயக நடைமுறை. அதை இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது சரியாகாது. அவைத்தலைவர் தனபால், சட்டசபை மரபுகளை மறந்து செயல்படுகிறார் என்றார்.

 

மேலும் செய்திகள்