முக்கிய செய்திகள்:
தமிழ் அறிஞர்களை செம்மொழி நிறுவனத்துக்கு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2007 ஆம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.செம்மொழி நிறுவனத்தின் இத்தகைய அவல நிலைக்கு காரணம் அதற்கு தகுதியான தலைமை அமையவில்லை என்பது தான். இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கு நிரந்தர இயக்குனர் அமர்த்தப்படவில்லை. தற்காலிக இயக்குனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலருக்கும், தமிழுக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை.செம்மொழி நிறுவனம் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது என்ற வகையில், தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் தான் அதற்கு இயக்குனராக நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், இதை தமிழாய்வு நிறுவனமாக பார்க்காமல் மத்திய அரசு நிறுவனமாகவே பார்க்கும் அதிகாரிகள், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அதிகாரிகளில் ஒருவரை பொறுப்பு இயக்குனராக நியமிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் தமிழ் தெரியாத அதிகாரிகள் பலர் இதன் பொறுப்பு இயக்குனர்களாக இருந்துள்ளனர்.இப்போது பொறுப்பு இயக்குனராகவுள்ள பூமா என்பவர் தொடர்வண்டித்துறை அதிகாரி ஆவார். தமிழை படிக்காத இவரைப் போன்றவர்கள் தமிழாராய்ச்சியை திறம்பட நடத்துவார்கள் என்று எந்த அடிப்படையில் மத்திய அரசு நம்புகிறது என்பது தெரியவில்லை.

நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, முறைப்படி தேர்வாகி பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களை தொடர்ந்து அதே நிலையிலேயே வைத்துள்ளனர். இவர்களின் 10 கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாக கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்த நிர்வாகம் இன்று வரை ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. அது மட்டுமின்றி, நீதிகேட்டு நீதிமன்றம் சென்ற பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.

தமிழை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம் சீரழிந்து வருவதை அனுமதிக்க முடியாது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மாற்றுப்பணி முறையில் பணியாற்றி வரும் இயக்குனர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை அவர்களின் சொந்தத் துறைக்கு அனுப்பிவிட்டு தமிழாய்ந்த அறிஞர்களை முழுநேர இயக்குனராகவும், பதிவாளராகவும் நியமிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் உள்ள தினக்கூலி பணியாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்