முக்கிய செய்திகள்:
கட்டிட மீட்புக்குழுவினருக்கு ஜெயலலிதா பரிசு வழங்கி பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிட விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டோருக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

கடந்த மாதம் 28 ஆம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தவுடன் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆறு நாட்கள், இரவு, பகல் பாராமல், வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், உயிரை துச்சமென மதித்து, ஒற்றுமையே பலம் என்பதற்கேற்ப ஈடுபட்டு மலைப்பாகவும், வியப்பாகவும் இருந்த பணியை அனாயாசமாக செய்து முடித்துள்ளீர்கள்.

மொத்தம் 88 நபர்களை மீட்டெடுத்து இருக்கிறீர்கள். இதில், 27 நபர்களை நீங்கள் உயிருடன் மீட்டெடுத்து இருக்கிறீர்கள். எஞ்சியுள்ள 61 நபர்களின் உடல்களை மீட்டெடுத்து அவர்களை அவர்தம் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளீர்கள்.

நீங்கள் எல்லாம் மிகுந்த ஈடுபாட்டுடனும், பொறுமையுடனும், கருமமே கண்ணாயினார் என்பதற்கேற்ப மீட்புப் பணியினை திறம்பட செய்து முடித்துள்ளீர்கள். கடினமான சூழ்நிலை மற்றும் மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நீங்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது செம்மையானது சிறப்பானது.

நீங்கள் எல்லாம் பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்தாலும், கண்ணும் கருத்துமாக கடமை ஆற்றியவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது எனது தலைமையிலான அரசின் கடமை. அந்த வகையில், இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு காவல் துறை, தமிழ் நாடு அதிரடிப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தமிழ்நாடு ஊர்க் காவல் படை, மருத்துவத் துறை, நெடுஞ்சாலைகள் துறை, பொதுப் பணித் துறை, சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி நகராட்சி நிருவாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு துறைகளைச் சார்ந்த 3,750 அலுவலர்கள் இந்த கடினமான பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அரசு துறைகள் இந்தப் பணியில் மிகுந்த ஒருங்கிணைப்புடனும் திறமையுடனும் செயல்பட்டு இருப்பது மெச்சுவதற்கு உரியது.

இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர்களை கண்டறிவதில் மோப்ப நாய்களும் திறம்பட பணியாற்றி இருக்கின்றன. மோப்ப நாய்களின் பயிற்சியாளர்களுக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்