முக்கிய செய்திகள்:
ஆட்சியரிடம் பூட்டு சாவியை கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்

நெல்லையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி இந்து மக்கள் கட்சியினர் பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஆட்சியரிடம் கொடுக்க வந்தனர். இந்த நூதன போராட்டம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துமக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் உடையார், மாவட்ட பொதுச்செயலாளர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று (07/7/2014) காலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கையில் பூட்டு சாவிகளை வைத்திருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புக்குள்ளானது.

இதுபற்றி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மதுவால் இளைஞர்கள் சீரழிகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கின்றனர். மதுவால்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். இருந்தாலும் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். ஆட்சியர் கையாலேயே டாஸ்மாக் கடைகளை பூட்ட வேண்டும் என்பதற்காக பூட்டு சாவிகளை எடுத்து வந்திருக்கிறோம். பூட்டுச்சாவியுட்ன் மனுவையும் ஆட்சியரிடம் கொடுக்கப்போகிறோம் என்றனர்.

இதையடுத்து ஆட்சியர் கருணாகரனை பார்க்க இந்து மக்கள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்றனர். அங்கிருந்த அதிகாரிகளும் அதிகாரிகளை சந்திக்க வந்தவர்களும் பூட்டு சாவியுடன் வந்தவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் ஆட்சியர் கருணாகரனை சந்தித்த அவர்கள் பூட்டு சாவி மற்றும் கோரிக்கை மனுவையும் கொடுத்து விட்டு வந்தனர்.

இந்த நூதன போராட்டத்தால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.

மேலும் செய்திகள்