முக்கிய செய்திகள்:
கம்பெனியை கேட்டு மிரட்டல் : நடிகர் சரத்குமார் மீது பெண் புகார்

திரைப்படங்களில் நாட்டாண்மையாக வந்து தீர்ப்புகள் தரும் நல்லவராக நடிக்கும் சரத்குமார், நிஜத்தில் அடியாட்களை ஏவி விட்டு கொலை மிரட்டல் விடுவதாக நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பரபரப்பு
புகார் அளித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருப்பவர் மதனகுமாரி சுபாஷ். இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் ரோட்டில் உள்ள அதுரா அபார்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று (30/6/2014) காலை அப்பகுதியில் உள்ள பெண்களை திரட்டிக்கொண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவர் ஆட்சியர் கருணாகரனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நானும் கோவையில் வசிக்கும் அருண்தங்கம் என்பவரின் மகள் கோபிகாலோகு
என்பவரும் சேர்ந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஹைபெர்ல் பல்க் கண்டெய்னர்ஸ் என்று கூட்டு பங்கு நிறுவனத்தை கடந்த 2010ம் ஆண்டு துவங்கினோம்.

கூட்டு பங்கு நிறுவனத்தில் பங்குதாரர்களிடையே பிரச்சனை ஏற்பட்டால் அதை அர்பிட்ரேஷன் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் கோபிகாவும் அவர் தந்தை அருண்தங்கம், அவரது சகோதரியின் கணவர் பிரபு தென்காசி தொகுதி எம்.எல்.ஏ வும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனருமான சரத்குமாரை வைத்து எனது கணவர் சுபாஷை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கையெழுத்து பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் நெல்லை, தூத்துக்குடி காவல்நிலையங்களில பல்வேறு பொய் புகார்களை செய்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம்தேதி அன்று நெல்லை எஸ்பியிடம் கோபிகா பொய் புகார்செய்துள்ளார். அந்த புகாரின்மீதான விசாரணையில் நானும் எனது கணவரும் நேரில ஆஜராகி உரிய விளக்கமும் அளித்தோம். அதற்கான ஆவணங்களையும்சமர்ப்பித்தோம்.

பின்னர் அதே புகாரின் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குப்பதிவு செய்திட கேட்டு மனு செய்தார். அதன் மீதான விசாரணைக்கும் நாங்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளித்தோம். இந்நிலையில் நெல்லை குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர்நீதிமன்றத்தில்நேரடி அனுமதி பெற்று அதன்மூலம் எங்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு கூட்டுபங்கு நிறுவனத்தின் பிரச்னையை தீர்க்க நான் கோபிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அதற்கான அவர் அனுப்பிய பதில் நோட்டீசில் சரத்குமார் எம்எல்ஏ கட்டைப்பஞ்சாயத்தின் மூலமாகத்தான் தீர்க்க இயலும் என்ற ரீதியில் அதில் கூறியுள்ளார். இந்நிலையில் எங்கள் மீதான வழக்கிற்காக நாங்கள் மனு தாக்கல் செய்திருந்தோம்.

அந்த மனு மீதான விசாரணையில் கடந்த 27ம்தேதி அன்று இருதரப்பினரும் மெடிட்டேஷன் அலுவலகத்தில் ஆஜராகி சமரசம் பேசுவதற்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நாங்களும் வந்தோம். அப்போது கோபிகா லோகு, அருண்தங்கம், பிரபு ஆகியோர் தூண்டுதலின் பேரில் அடையாளம் தெரிந்த 3 பேர் மற்றும் சிலர் என்னை ஆபாசமாக திட்டியும், என் கணவர் சுபாசை கல் மற்றும் கம்பியால் தாக்கினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சரத்குமார் அண்ணன் சொன்னது போல் கம்பெனியை எழுதி கொடுத்து விட்டு ஓடிவிடு. இல்லையென்றால் கண்டதுண்டமாக வெட்டி புதைச்சிருவோம் என்று மிரட்டினர். அந்த நேரத்தில் அங்கு ஆட்கள் திரண்டதால் கும்பலை சேர்ந்தவர்கள் சென்று விட்டனர். இப்போது என் கணவர் சுபாஷ் சிகிச்சையில் உள்ளார்.

திரைப்படங்களில் நாட்டாண்மையாக வந்து தீர்ப்புகள் தரும் நல்லவராக நடிக்கும் சரத்குமார், அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போர்வையில் அடியாட்களை ஏவி விட்டு என்னையும், என் கணவரையும் கம்பெனியை எழுதி கொடுக்காவி்ட்டால் கொலை செய்து விடுவேன்என்று மிரட்டல்விடுத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் சட்டத்தை மதிக்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே எனக்கும், எனது குடும்பத்ததிற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்று கூறியுள்ளார். சரத்குமார் எம்.எல்.ஏ மீது பெண் புகார் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகள்