முக்கிய செய்திகள்:
தாமிரபரணியில் குப்பை கழிவுகளை கொட்டக் கூடாது : ஆட்சியர்அறிவுறுத்தல்

தாமிரபரணி ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

பாளையங்கோட்டை, வ.உ.சி. மைதானத்திலிருந்து நேற்று காலை தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், " நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்றாற்போல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவையாகவும், உயிர் வாழ ஆதாரமாகவும், விளங்குவது தண்ணீர். உலகின் பரப்பளவில் 29சதவீதம் நிலப்பரப்பாகவும், 71சதவீதம் நீர்பரப்பாகவும் உள்ளது.

இருப்பினும் மனிதன் அன்றாட பயன்படுத்துகின்ற வகையில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைவானது. நிலத்தடி நீரினை நாம் அனைவரும் சேமித்திட பாடுபாட வேண்டும். தமிழக முதல்வர்நிலத்தடி நீரின்அளவினை மேம்படுத்திடும் வகையில் அனைத்து அரசு அலுவலக கட்டங்கள், தனியார் கட்டங்கள், குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அமைத்திட வேண்டும்என உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை மக்கள் பயன்பெறும் வகையில் நாம் பாதுகாத்திட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில்தோன்றி, வங்காள விரிகுடாவில்கலக்கும்வற்றாத ஜீவநதியான தாமிரபரணி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர்ஆதாரமாக விளங்குகிறது.

தாமிரபரணி ஆற்றினை மாசுபடாமல் பாதுகாப்பது நாம் அனைவரது கடமையாகும். தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டு வரும் பணிகள் அனைத்தும் பாராட்டுதலுக்குரியது. மேலும், பொதுமக்களுக்கு தாமிரபரணி ஆற்றில் செல்லும் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பொறுப்பை உணர்ந்து தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை கொட்டுவது, கழிவுநீரை கலக்குவது, ஆக்கிர மிப்புகளை தவிர்த்திட வேண்டும்.

இயற்கை தந்த பெரும் வரமான தாமிரபரணி ஆற்றினை மாசுபடாமல் பாதுகாத்திட நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு பாடுபடவேண்டும் என்றார். பேரணியில், கல்லூரி. பள்ளிகளை சேர்ந்த பசுமைப்படை மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலிந்து புறப்பட்ட பேரணி நூற்றாண்டு மண்டபம் வழியாக மீண்டும் வ.உ.சி. மைனத்தை வந்தடைநதது.

 

மேலும் செய்திகள்