முக்கிய செய்திகள்:
அணைகளை உறுதி செய்ய வேண்டும் : கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

27-6-2014 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், கேரள மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, முதல்-மந்திரி உம்மன்சாண்டி, “முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானவை.

2009-ம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த 4 அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு அந்த 4 அணைகளும் கேரளாவுக்கு சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பேரவையிலேயே அறிவித்ததையும் குறிப்பிட்டு; “நதிநீர் சம்பந்தமாக தமிழ்நாட்டின் உரிமைகளை நான்தான் நிலைநாட்டி வருகிறேன்” என்று சொல்லி வரும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா; இந்த 4 அணைகளும் கேரளத்திற்கு சொந்தம் என்று உம்மன்சாண்டி உரிமை கொண்டாடுகிறாரே, அந்த உரிமை யாரால் நிலைநாட்டப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்த கேள்விக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?.

கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது என்று சொல்லி அவரது அறிவிப்பினை கண்டித்திருக்க வேண்டும் அல்லது கேரள முதல்-மந்திரி செய்திருக்கும் அறிவிப்பினைப் பற்றி தமிழக அரசு மேற்கொண்ட அல்லது மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்கி இருக்க வேண்டும்.

இப்படி ஆக்கப்பூர்வமான பதிலை அளிக்காமல்; முக்கியமான இந்த பிரச்சினையில் தமிழக மக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரச்சினையை நாட்டு மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக என்மீது எரிச்சலையும், கோபத்தையும் கொட்டியிருக்கிறார். 2009-ம் ஆண்டின் பெரிய அணைகள் குறித்த தேசிய பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும்; 2012-ம் ஆண்டின் பதிவேட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன என்றும்; எனினும் பின் குறிப்பில் இந்த 4 அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.

2012-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதாதானே பொறுப்பு வகித்தார்? தேசிய பதிவேட்டில் இந்த 4 அணைகளும் 2012-ம் ஆண்டு கேரள மாநில அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இதுகுறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டாமா? ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தானே தேசிய பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும் என்னை பார்த்து 2012-ம் ஆண்டில் ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கேட்டால்; அப்படி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலின் பேரில், 2013-ம் ஆண்டு தேசிய பதிவேட்டில் “இந்த 4 அணைகளும் தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று பின்குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். ஆனால் 2009-ம் ஆண்டும், 2012-ம் ஆண்டும், 2013-ம் ஆண்டு பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்ததை போலவே, “4 அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக ஜெயலலிதாவே தன்னுடைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

உண்மை நிலை இப்படியென்றால், 2013-ம் ஆண்டு பின் குறிப்பில் தெளிவாக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் வற்புறுத்தலினால்தான் என்று ஜெயலலிதா உரிமை கொண்டாடிப் பெருமைப்பட்டுக்கொள்வதில் எந்தவித பொருளும் இல்லை என்பதை அவருடைய அறிக்கையே காட்டிக்கொடுத்து விட்டது. “பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம்” என்று சொன்ன உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் என்றெல்லாம் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது, கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் அறிவிப்புக்கு தான் பொருந்துமே தவிர, அதை எடுத்துச் சொன்ன எனக்கு எப்படிப் பொருந்தும்?

இனியாவது முறையான முயற்சிகளின் மூலம் தேசிய பதிவேட்டில் இந்த 4 அணைகளும் தமிழகத்திற்கு சொந்தமானவையே என்பதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி செய்ய வேண்டும். கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பது பற்றி கேரள சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தை என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை தனது பதில் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி-கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

பெண்ணையாற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நதிநீர் இணைப்பு பற்றி இப்போது வாய்கிழிய பேசும் ஜெயலலிதா, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான பணிகளையும், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கான பணிகளையும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நிறைவேற்றிட, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா விளக்க முன் வருவாரா?. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்