முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இயற்கைவளம் சார்ந்த காடுகள், மலைப் பிரதேசங்கள், அருவிகள் போன்றவை கண்கவர் காட்சிகள் மட்டுமல்ல மன வளத்திற்கும் உடல்வளத்திற்கும் அடிப்படையானவையும் கூட. மேலும் இயற்கை வனப்பகுதிகள் சுற்றுப் புறச்சூழல் மாசுபடாமல் காக்கும் வரப்பிரசாதம். உலகவெப்பமயமாதல் என்னும் பேரழிவிற்கு வன வளங்களை அழித்தலும், அவற்றைப் பேணாமல் விட்டுவிட்டதும் தான் முதல் காரணம் என்று எச்சரிக்கை மணிகள் ஒலித்த வண்ணம் உள்ளன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இயற்கை சார்ந்த வனப்பகுதிகள் - அருவிகள் மலைப்பிரதேசங்கள் போன்றவற்றின் எழிலைப் பாதுகாப்பது மட்டமல்லாது அவற்றை அழிவிலிருந்தும் பாதுகாக்கும் விதமாக“ தமிழ் நாடு சுற்றுச்சூழல் கூர்உணர்வு - பாரம்பரியம் மிக்கபகுதிகள் பாதுகாப்பு ஆணையம்” என்ற அமைப்பை முதல்–அமைச்சர் தலைமையில் உருவாக்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும், தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களுள் சிறப்புமிக்க குற்றாலத்தில், அருவியின் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாகவும், குற்றாலத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியினை இரட்டிப்பாக்குகிறது.

இயற்கை வளங்களைப் பேணும் விதமாக முதல்– அமைச்சர் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களால் மகிழ்ந்து பாராட்டப்படும் என்பது உறுதி.

அந்தவகையில் சிறப்பான தொரு நடவடிக்கைப் பணிகளை மேற்கொண்டிருக்கும் முதல்– அமைச்சருக்கு என் சார்பிலும், தென்காசி தொகுதிமக்கள் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்