முக்கிய செய்திகள்:
சுற்றுலா வரவேற்பு மையங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கலை நேர்த்தியும் கம்பீரமும் மிகுந்த செட்டி நாட்டு மாளிகைகளை உள்ளடக்கிய காரைக்குடிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, காரைக்குடியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா வரவேற்பு மையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும், கோயம்புத்தூர்– ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவண்ணாமலை–ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள சுற்றுலா வரவேற்பு மையங்கள்;

மாமல்லபுரம் சுற்றுலா அலுவலக வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட சுற்றுலா வரவேற்பு மைய கட்டடம்;

ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் 57 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் ஓய்வு இல்லம், துயில் கூடம், சுற்றுலா தகவல் மற்றும் கருத்துவிளக்க மையம்;

வேலூர் மாநகராட்சி, ஓட்டேரியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சிறுவர் பூங்கா;

என 3 கோடியே 4 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலாத் துறை கட்டடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்காவினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத் துறையின் கீழ் செயல்படும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட அமராவதி காட்சிக்கூடம்; 55 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்து சிற்பங்கள் காட்சிக்கூடம்; 20 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சமண சிற்பங்கள் காட்சிக் கூடம்; 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மானிடவியல் காட்சிக் கூடங்கள்; 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட துகிலியல் அச்சுக் கட்டைகள் காட்சிக் கூடம்; 1 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் காட்சிக் கூடம்; சிறுவர் அருங்காட்சி யகத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண காட்சியரங்கம்; சென்னை அரசு அருங்காட்சியகத்தை பற்றி வலைதளம் மூலம் பொதுமக்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் நெருங்கிய காட்சியமைப்பில் கணிணி மூலமாக காண 2 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நேர்நிகர் உலா; பள்ளி மாணவ மாணவிகள் அருங்காட்சி யகத்தை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் 30 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக உலா பேருந்து; புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 80 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள காட்சிக்கூடங்கள்;

என 3 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியகத் துறை திட்டங்களை திறந்து வைத்து, அரியலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள கள புதை உயிரிப் படிவ அருங்காட்சியகத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், தல்லாகுளம் கிராமத்தில் 41 சென்ட் நிலப்பரப்பில் 87 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலை பண்பாட்டு வளாகம்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் சிறப்பு பூங்காவுடன் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகக் கலைக் கூடக் கட்டடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பூம்புகார் பகுதியில் மேற்பரப்பு ஆய்வு மற்றும் ஆழ்கடல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் தொல்லியல் துறையின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் அகழ்வைப்பக அருங்காட்சியகக் கட்டடத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆக மொத்தம் 10 கோடியே 98 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான சுற்றுலாத் துறை, அருங்காட்சியகங்கள் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை ஆகிய துறைகளின் திட்டப் பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியும், திறந்தும், துவக்கியும் வைத்தார்.

மேலும் செய்திகள்