முக்கிய செய்திகள்:
பிஎஸ்எல்வி-சி23 கவுன்ட் டவுன் தொடக்கம்

இஸ்ரோ சார்பில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 49 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வரும் 30-ம் தேதி காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 714 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட்-7’, ஜெர்மனியைச் சேர்ந்த ‘அய்சாட்’, சிங்கப்பூரின் ‘வெலோக்ஸ்’, கனடாவின் என்எல்எஸ் ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் சுமந்து செல்கிறது.

பிஎஸ்எல்வி-சி 23 ராக்கெட்டை 30-ம் தேதி காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவ ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ராக்கெட்டை ஏவ தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது தொடர்பாக விஞ் ஞானிகள் குழுவினர் வெள்ளிக் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

அப்போது, விண்ணில் மிதக்கும் 13 ஆயிரம் வகையான குப்பைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். குப்பைகள் அதிகம் இருப்பதால், ராக்கெட் செலுத்தப்படும் நேரத்தை சிறிது தாமதப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர். எனவே, ராக்கெட் ஏவப்படும் நேரம் 3 நிமிடம் தாமதமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்