முக்கிய செய்திகள்:
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் அன்னதானக் கூடம் - கட்டடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (2662014) காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அற நெறியையும், ஆன்மீக உணர்வையும், தனி மனித ஒழுக்கத்தையும் போற்றிப் பேணும் நெறிமுறைகளை மனிதர்களிடையே விதைத்து வேரூன்றச்செய்யும் விளை நிலங்களாகவும், புகழ் வாய்ந்த பழைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொக்கிஷங்களாகவும் விளங்கும் திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பேணிப் பாதுகாப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற அரும்பெரும் பணிகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

திருக்கோயில்களில் பணியாற்றி பணியிலிருக்கும்போது இயற்கை எய்திய 110 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆலய ஊழியர்கள் குடும்ப நல நிதியுதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. செந்தூர் பாண்டியன், தலைமைச் செயலாளர் திரு. மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ரா. கண்ணன், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் திரு. ப. தனபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்