முக்கிய செய்திகள்:
நீலகிரி மாவட்டத்தில் 37.50 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று (2662014) தலைமைச் செயலகத்தில், நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட், பான்காடு பகுதியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் உணவுக் கூடத்தைக் கொண்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலை - நியாய விலைக்கடை கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

பள்ளி மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை-எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றலின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டிகள், காலணிகள், வண்ணப் பென்சில்கள் ஆகியவற்றை வழங்குதல், பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல சிறப்பான திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டம், பான்காடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி 1967-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் இருளர் இன குழந்தைகளின் நலன் கருதி துவங்கப்பட்டு, மிகவும் பழுதடைந்த பழமையான கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த பழமையான பள்ளிக்கு பதிலாக புதிய பள்ளியை கட்டித் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நீலகிரி மாவட்டம், பான்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்குட்பட்ட நிலத்தில் 4 வகுப்பறைகள், உணவுக்கூடம் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து தளவாடங்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய பள்ளிக் கட்டடத்தை 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் கட்டிக் கொடுத்துள்ளது.

இந்தப் பள்ளியானது 7 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், மாணவர்கள் கல்வி பயில தரமான மேசை, நாற்காலிகள், பச்சைநிற எழுத்துப் பலகை, மின்விசிறிகள், மின்விளக்குகள், மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் வண்ணம் ஒளி, ஒலி வகுப்புகள் நடத்திட வசதிகள், கூட்ட அறை, விளையாட்டுத் திடல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனித்தனியான கழிப்பறைகள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பிரத்தியேகமான கழிப்பறைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன - அதுமட்டுமல்லாமல், சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிக்க இருப்பு அறையுடன் கூடிய சமையலறை, பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக இரும்பு நுழைவாயிலுடன் நான்கு புறமும் இரும்பு வேலியுடன் கூடிய சுற்றுச்சுவர், தார்சாலை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன - நீலகிரி மாவட்டம், பான்காடு பகுதியில் இயங்கி வந்த கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலை - நியாய விலைக்கடை 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அப்பகுதியிலுள்ள 450 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர் - தற்போதுள்ள நியாயவிலைக் கடை சாலையோரத்திலிருந்து 5 அடி பள்ளத்தில் அமைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அப்பொருட்களை தலையில் சுமந்து, மேடேறி சாலைக்கு வருவதற்கும், மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்குவதாலும் மிகவும் சிரமப்பட்டனர் - இப்பகுதி மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நீலகிரி மாவட்டம், பான்காடு பகுதியில் இயங்கி வரும் கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலை - நியாய விலைக்கடைக்கு பதிலாக கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்குட்பட்ட நிலத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் நியாய விலைக்கடை கட்டடத்தை கட்டிக் கொடுத்துள்ளது - நீலகிரி மாவட்டம், பான்காடு பகுதி மாணவ-மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்காகவும் கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தால் பான்காடு பகுதியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் உணவுக்கூடத்தைக் கொண்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலை - நியாய விலைக்கடை கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் திரு ஆர். காமராஜ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் திரு. மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் திருமதி.எம்.பி. நிர்மலா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி. த.சபிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்