முக்கிய செய்திகள்:
இந்தி திணிப்பை கண்டித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, “பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதிலும், முதலில் இந்தியில் பதிவிட்ட பின்னர் ஆங்கிலத்தில் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.சட்டப்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலமாகும். 1976-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த சட்டப்படி, மத்திய அரசு அலுவலகலங்களில் இருந்து சி- பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அச்சட்டப்பிரிவில், இந்தி பேசாத மக்கள், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சி- பிராந்தியத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் அனைத்து தொடர்பையும் ஆங்கிலத்தில் மேற்கொள்வது அவசியமாக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்காவிட்டால் அது அவர்களுக்குச் சென்றடையாது.

அவ்வாறு இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் தொடர்பு மொழியாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது 1963-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்திற்கே எதிரானதாகும்.எனவே, அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சக உத்தரவில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்தை பயன்படுத்த பிரதமர் வழிவகை செய்ய வேண்டும்.

இதேபோல், கடந்த 3-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் தொண்மை வாய்ந்த தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தேன்.

மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் அத்தனையையும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 8-ல் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.இந்த கோரிக்கைளை நிறைவேற்றினாலே, சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

மேலும் செய்திகள்