முக்கிய செய்திகள்:
மோடி அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

முல்லைப்பெரியாற்று அணை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் கடந்த மே 7ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இப்போதிருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதேநேரத்தில் தமிழகத்தின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை பாராட்டியதுடன், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் உயரதிகாரி தலைமையில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு இந்தக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இக்குழுவின் மேற்பார்வையில் தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது.

மக்களவைத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் சம்பந்தப்பட்ட பணிகளால் மேற்பார்வைக் குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக இன்னும் உயர்த்தப்படாத நிலையில், அதைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டைப் போட கேரள அரசு முயன்றது. அதன் ஒரு கட்டமாக அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் ரூ.10 கோடியில் வாகன நிறுத்தத்தை அமைத்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதுடன், நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகளை மேற்பார்வையிடுவதற்கான குழுவையும் உடனடியாக அமைக்கும்படி கடந்த 4 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இத்தகைய சூழலில் மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதால் முல்லைப்பெரியாறு அணை பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கையால் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதும், அதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் செழிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதால் இம்மாவட்டங்களின் விவசாயிகள் கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வந்த துயரங்கள் தீரும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், பெரியாறு பாசன விவசாயிகள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியப் பணியும் உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தான் அப்பணியாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து 15 காவிரிக்கரை மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கும்படி பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்