முக்கிய செய்திகள்:
18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்களை : ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாவட்டம்– வீரபாண்டி, ஓமலூர் மற்றும் ஜலகண்டாபுரம்; திருப்பூர் மாவட்டம்–கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டம்– கோவில்பட்டி மற்றும் கொம்மடிக்கோட்டை; விருதுநகர் மாவட்டம்– சேத்தூர் மற்றும் திருத்தங்கல்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்– தாத்தையங்கார்பேட்டை; பெரம்பலூர் மாவட்டம்– வேப்பந்தட்டை; நாகப்பட்டினம் மாவட்டம்– திருப்பூண்டி; கரூர் மாவட்டம்– நங்கவரம்;

நாமக்கல் மாவட்டம்– வேலூர் (பரமத்தி), குமாரபாளையம்; திருவண்ணாமலை மாவட்டம்–வெம்பாக்கம்; திருநெல்வேலி மாவட்டம்– வள்ளியூர்; விழுப்புரம் மாவட்டம்– வடக்கனந்தல், ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, பொது மக்களின் நலன் கருதி கூடுதல் வசதிகளுடன் காத்திருப்போர் அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்தளமேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வையிடும் வகையில் 58 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியை முதல்– அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், பதிவுத்துறைத் தலைவர் முருகய்யா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்