முக்கிய செய்திகள்:
உயர்கல்வி துறை சார்பில் ஆய்வக கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 23,766 சதுர அடி பரப்பளவில் 25 அறைகள், ஆசிரியர்களுக்கான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விப் பணியாளர் கல்லூரி விருந்தினர் மாளிகையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கஸ்தூரிபாய் மகளிர் விடுதி; காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெள்ளி விழா கட்டடம், 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரி பெண்கள் விடுதி மற்றும் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டி கட்டடம்; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு கூடுதல் விடுதிகள் மற்றும் நான்கு கூடுதல் ஆய்வகங்கள்;

கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு கூடுதல் ஆய்வகங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி - புத்தூரில், ஸ்ரீனிவாசா சுப்பராயா பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகள்; கடலூர் மாவட்டம், சிதம்பரம், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஏழு கூடுதல் வகுப்பறைகள்;

என 9 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்கலைக்கழக, கல்லூரி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கான கட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.திருச்சிராப்பள்ளி - பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நிர்வாக விரிவாக்கக் கட்டடம்; காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறைகள், கருத்தரங்குக் கூடம் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்; விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஓய்வறைகள் மற்றும் உணவறை கட்டடங்கள்;

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடம், ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் அறைகள் மற்றும் நூலகக் கட்டடங்கள்; கரூர் அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னிரெண்டு வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகக் கட்டடம்; என 14 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.ஆக மொத்தம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்வித் துறையின் சார்பில் அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மொத்த மதிப்பு 27 கோடியே 35 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியின் போது, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் புதிதாக நிறுவப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வகுப்புகளையும், தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மென்திறன் மையங்களையும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குமார் ஜயந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்