முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவுக்கு மோடி கடிதம்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பணி நிமித்தமாக ஆப்கானிஸ்தான் சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், கடந்த 2 ஆம் தேதியன்று தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.இந்நிலையில் அதற்கு பதிலளித்து ஜெயலலிதாவுக்கு மோடி இன்று அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக உறுதி அளித்துள்ளார்.

காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகத்துடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும், தாமும் இது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்