முக்கிய செய்திகள்:
தருமபுரியில் காவலர்களை கட்டிப்போட்டு சந்தன மரங்கள் கடத்தல்

தருமபுரி அருகே வனக்காவலர்களை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் சந்தன மரங்களை வெட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரூரில் உள்ள மாவட்ட வன ‌அலுவலகத்திற்குள் நள்ளிரவில் முகத்தை மூடியபடி 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்தது. அங்கு பணியில் இருந்த வனக் காவலர்கள் தேவராஜூலு, சின்னதம்பி, இளநிலை உதவியாளர் சுரேஷ் ஆகிய மூவரையும், இந்தக் கும்பல் ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பிடுங்கிக் கொண்டு கட்டிப் போட்டுள்ளனர்.பின்னர் வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்களை, மரம் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு அறுத்து எடுத்துச் சென்றனர். அதிகாலையில் அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு வந்த வனஅலுவலர் ஒருவர், கட்டிப் போட்டிருந்த அதிகாரிகளை விடுவித்து, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வனக்காவலர்களிடம், மாவட்ட வன அதிகாரி ராமசுப்ரமணியம் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற சந்தன மரங்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். வனக்காவலர்களை கொள்ளையர்கள் கட்டி போட்டுக் கொண்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்