முக்கிய செய்திகள்:
தயாநிதி மற்றும் கலாநிதியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது, சென்னை போட் கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு 323 அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் பிஎஸ் என்எல் தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டன.

அவர்களது குடும்ப டிவியான சன் டிவியின் வளர்ச்சிக்கு இதை பயன்படுத்திக்கொண்டதாகவும், இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் தயாநிதிமாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர்கள் பிரேமானந்த், வேலுச்சாமி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

முதலில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை, முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.டெல்லி சிபிஐ அதிகாரிகளான டிஎஸ்பிக்கள் ராஜேஷ், மகேந்தர் உள்பட 4 பேர் சென்னையில் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சன் நெட்வொர்க் முன்னாள் அதிகாரிகள் சரத்குமார், ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோரிடம் கடந்த வாரத்தில் 3 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர்கள் பிரேமானந்த், வேலுச்சாமி மற்றும் சில அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.

இந்த வழக்கில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறனிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹா கையெழுத்திட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு வருமாறு மாறன் சகோதரர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்