முக்கிய செய்திகள்:
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாண பகுதியில் கல்விச் சேவையில் ஈடுபட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கனில் முகாம்களில் இருக்கும் குழந்தைகளுடன் இருந்த போது கடத்தப்பட்டிருக்கிறார். அவர் கடத்தப்பட்டது அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பாதிரியார் பிரேம்குமார், தமிழகத்திலும் பழங்குடியின மக்கள் நலனுக்காக பணியாற்றி இருக்கிறார். தீவிரவாதிகள் பிடியில் உள்ள அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளது.

எனவே, பாதிரியாரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கும் விவகாரத்தில் பிரதமர் என்ற முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் தலையிட்டால்தான் பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்