முக்கிய செய்திகள்:
தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும்: ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் தங்கி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த நல்லுள்ளம் படைத்த பாதிரியாரை அங்குள்ள தலிபான் தீவிரவாதிகள் கடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரையொட்டிய பகுதிகளில் பள்ளிகளை அமைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமின்றி, குழந்தைகள் தீவிரவாத இயக்கங்களில் சேருவதை பிரேம்குமார் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாதிகள் கடந்த 2ஆம் தேதி துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேம்குமாரை மீட்க ஆப்கானிஸ்தான் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், பாதிரியார் பிரேம்குமார் பத்திரமாக மீட்கப்படும்வரை நிம்மதி அடைய முடியாது. பாதிரியாரைக் கடத்திய தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அவரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

பாதிரியார் பிரேம்குமார் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர், அவரது கிராம மக்கள், அவரால் பயனடைந்த மழைவாழ் மக்கள் மற்றும் அகதிகள் என ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றத்துடனும், துடிதுடிப்புடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மத்திய அரசும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிரியார் பிரேம்குமாரை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்