முக்கிய செய்திகள்:
பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் கிராமம் அருகே 30.5.2014 அன்று அரியலூரிலிருந்து செந்துறை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த பொய்யாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மனைவி அலமேலு, உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜக்கண்ணு என்பவரின் மனைவி ஆனந்தி, வீரக்கண் கிராமத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகள் கவிதா, நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி ஜெயந்தி, பிச்சைப்பிள்ளை என்பவரின் மகன் சுரேஷ், ஆதிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் செல்லமுத்து,

சிதலவாடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் தனவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயும்; நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகள் சீதா, நந்தியன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகள் ஜெயலெட்சுமி, அரியலூரைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகள் பிரபாதர்ஷினி, இளங்கோவன் என்பவரின் மகன் இளவரசன், நல்லாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவி சாந்தி மற்றும் இளவரசன் என்பவரின் ஆண் குழந்தை அபினேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்தில் 23 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000- ரூபாயும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்