முக்கிய செய்திகள்:
கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தி.மு.க.வினர் ஏற்பாடு

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வருகிற 3–ந் தேதி 91–வது பிறந்தநாள். இதற்கான விழா, நாளை முதல் 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. நாளை தி.மு.க. மகளிர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

மகளிருக்கு உரிமை கிடைக்க கலைஞருக்கு பெரிதும் துணை நிற்பது அரசியல் பணியா? இலக்கிய பணியா? என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் இந்திரகுமாரி, கஞ்சனா கமலாநாதன், விஜயா தாயன்பன், ராஜம்ஜான், திருவாரூர் விஜயகுமாரி, பவானி ராஜேந்திரன், சங்கரி நாராயணன், வசந்தி ஸ்டான்லி உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள்.

விழாவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான் பேகம் தலைமை தாங்குகிறார். தி.மு.க. துணை பொது செயலாளர் சற்குணபாண்டியன், அமைப்பு- செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம், ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தி.மு.க மகளிர் அணிசெயலாளர் புதுக்கோட்டை விஜயா வரவேற்கிறார். ஆ.ராசா, சிறப்புரையாற்றுகிறார். மகளிர் தொண்டரணி செயலாளர் காரல்மாக்ஸ் நன்றி கூறுகிறார்.

1–ந் தேதி மாலை 5 மணிக்கு தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் விழா நாதசுர இசையுடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ் அறிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு ரூ.10 ஆயிரம் அடங்கிய கலைஞர் இலக்கிய பொற்கிழியும் கேடயமும் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல்களமா? பகுத்தறிவு களமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. செல்வகணபதி பட்டி மன்ற நடுவராக இருக்கிறார். கோவி.செழியன், வசந்தி ஸ்டான்லி, ஈரோடு இறைவன், புதுக்கோட்டை விஜயா, சூரியா வெற்றி கொண்டான் உள்பட பலர் பேசுகிறார்கள்.

விழாவில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், அன்பகம் கலை, இந்திரகுமாரி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

2–ந் தேதி மாலை 4.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதில் திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் தெம்மாங்கு தேனரங்கம், தமிழறிஞர்கள் பங்கு பெறும் வாழ்த்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி சேகர் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

வாழ்த்தரங்குக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். சுப.வீர.பாண்டியன், திண்டுக்கல் லியோனி, சாரதா நம்பி ஆரூரன், மனுஷ்யத்தரன் உள்பட பலர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

3–ந் தேதி தி.மு.க.தலைவர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்ட மும் நடக்கிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்