முக்கிய செய்திகள்:
எந்த முடிவானாலும் கட்சியின் நன்மை கருதி தலைமை முடிவெடுக்கும் : ஞானதேசிகன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் தோல்வியைத் தழுவியது.இந்த ஒட்டுமொத்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவைகளை கட்சியினுடைய உள்ளரங்கில் பேச வேண்டிய விவகாரங்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் நம்முடைய வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை கண்டிப்பாக ஆராய வேண்டும்.

2009 தேர்தலில் நாம் பெற்ற வாக்குகள் 15.3 சதவீதம் என்பது கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் உள்ளடக்கியது. அதிலிருந்து 10.7 சதவீதம் குறைந்திருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 16.8 சதவீதம், புதுச்சேரியில் 23.1 சதவீதம், டெல்லியில் 42 சதவீதம், மிசோராமில் 17 சதவீதம், அரியானாவில் 18.87 சதவீதம், சண்டிகரில் 20 சதவீதம், அருணாச்சலபிரதேசத்தில் 13.91 சதவீதம், ஆந்திராவில் 27.45 சதவீத வாக்கு சரிவடைந்துள்ளது. ஆகவே இந்த சரிவு சரிதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற நான் அனைவரையும் சமமாக நடத்திச் சென்றிருக்கிறேன். கடந்த 29.5.2014 அன்று சில கட்சி நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை மனதிற்கு வேதனை அளிக்கிறது. ஏனெனில் கட்சி விவகாரங்கள் மற்றும் என் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு செல்கிற உரிமை நமது கட்சியில் உள்ளது. அறிக்கைகளின் மூலமாக கட்சியை பலகீனப்படுத்துகிற முயற்சி வருத்தத்திற்குரியது.

தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டதின் காரணமாக ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகளின் கருத்து அது அல்ல என்பதனை வெளிக்காட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் மற்றொரு அறிக்கையினை வெளியிட்டனர்.

என் மீது நம்பிக்கை வைத்துள்ள அவர்களுக்கும், தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த முடிவானாலும் கட்சியின் நன்மை கருதி தலைமை முடிவெடுக்கும். ஆகவே கட்சி விவகாரங்கள் மற்றும் குறை, நிறைகளை நேரடியாக தலைமையிடம் தெரிவிக்கும்படியும், இனி மேல் பத்திரிகை வாயிலாக அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என காங்கிரஸ் நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒற்றுமையுடன் பணியாற்றுகிற நேரம் இது.

ஜூன் 7–ந்தேதி சத்திய மூர்த்தி பவனில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்