முக்கிய செய்திகள்:
ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து : காங்கிரஸ் நிர்வாகிகள் அறிக்கை

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் அகில இந்திய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்குக் காரணம் என்ன? தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரிவர செயல்பட வில்லை.

மற்ற கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முறையாக காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கூட்டம் போடவில்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக் கூட்டம் கூட நடத்தவில்லை.தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை. அகில இந்திய தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில் கூட பாரபட்சமாக நடந்து கொண்டு அவர்களை நோகடித்தது.

இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கு முழுப் பொறுப்பும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத்தான் சேரும்.இனி, தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரசில் விவேகமாகச் செயல்படுகின்ற ஒரு தலைமையைத் தான் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இத்தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

மேலும் செய்திகள்