முக்கிய செய்திகள்:
மகாராணிகள் அணிந்த சேலை மீண்டும் அறிமுகம்

தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டியை பிரபலப்படுத்த 'வேட்டி தினம்' அனுசரிக்கப்பட்டது. வேட்டி விற்பனை சூடு பிடித்தது. வேட்டி கட்டும் ஆர்வமும் அதிகரித்தது. இதனால் கோ–ஆப்டெக்சில் வழக்கத்தை விட வேட்டி விற்பனை 3 மடங்கு அதிகமானது.

மற்றொரு பாரம்பரிய உடையான தாவணியை பிரபலப்படுத்தவும் கோ– ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது. பெண்களை கவரும் சேலைகளில் புதிய வடிவமைப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில், மகாராணிகள் அணிந்து புகழ்பெற்ற வடிவமைப்பு கொண்ட பட்டுச் சேலைகளை கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் சேகரித்துள்ளது. குறிப்பாக சிங்கம்பட்டி ஜமீன், மைசூர் மகாராணி, சிவகங்கை மகாராணி, சேதுபதி மகாராணி, சரபோது ராணிகள் அணிந்த சேலைகள் சேரிக்கப்பட்டன.

இந்த சேலைகளில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் காலங்களை கடந்தும் மக்களை கவர்கிறது. அதே வடிவமைப்பை பழமை மாறாமல் கலையம்சங்களுடன் பட்டுச் சேலைகளை கோ–ஆப்டெக்ஸ் வடிவமைக்கிறது. விரைவில் இந்த பாரம்பரிய பட்டுச் சேலைகள் விற்பனைக்கு வரஉள்ளது.இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா இன்று சென்னை கோ–ஆப்டெக்ஸ் நிறுவன தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'எம்ராய்டரி' பார்டர் வேட்டிகள், ஜெய்ப்பூர் 'பெட்ஷீட்'கள், இலக்கிய காட்சிகளுடன் கூடிய படுக்கை விரிப்புகள், தேனிலவு படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ரகங்களை பார்வையிட்டார்.

புதிதாக வடிவமைக்கப்படும் மகாராணிகளின் சேலை வடிவமைப்புகளையும் பார்த்தார். பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோ–ஆப்டெக்ஸ் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேட்டி – சேலை அணிந்து வருகிறார்கள். இன்று புதிய அமைச்சர் ஆய்வு செய்ய வந்ததால் வேட்டி – சேலை அணிந்து வந்திருந்தனர்.ஆய்வு கூட்டத்தில் கதர்துறை செயலாளர் கர்மந்தர்சிங், இயக்குனர் பிரகாஷ், மேலாண்மை இயக்குனர் சகாயம், கோ–ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், துணைத்தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்