முக்கிய செய்திகள்:
கொலை செய்யப்பட்ட கண்டக்டர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதி உதவி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

20.5.2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சில விஷமிகள் பேருந்தில் ஏறி நடத்துனர் செல்வாவிடம் தகராறு செய்ததின் பேரில் அவர்கள் தாழையுத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

மேற்படி பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட அந்த நபர்கள் பின் தொடர்ந்து வந்து பேருந்து நடத்துனர் செல்வாவிடம் மீண்டும் தகராறு செய்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் 24.5.2014 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வாவின் குடும்பத்திற்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்