முக்கிய செய்திகள்:
தலைமை கழகத்திற்கு ஜெயலலிதா நாளை வருகை

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 53 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 25–ந்தேதி அறிவித்து இருந்தார்.

இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் விழாவில் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குடும்ப நல நிதி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வருகை தரும் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்