முக்கிய செய்திகள்:
சாக்கடை நீரில் துணி துவைத்த ஆம் ஆத்மி கட்சியினர்

புதுவை பூமியான்பேட்டை 100 அடி சாலையில் கிறிஸ்தவர்கள் கல்லறை உள்ளது. அதன் அருகே சாக்கடை நீர் பெருகி சாலையிலும் பரவுவது வாடிக்கையாக உள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியினரின் கவனத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அந்த கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரில் முதலியார்பேட்டை தொகுதி ஒருங்கினைப்பாளர் ‘சுத்தம்’ சுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் துணிகளை துவைத்தனர்.

பொதுமக்களின் கவனத்தை கவர்ந்த இந்த நூதன போராட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் டாக்டர் ரங்கராஜன், செயலாளர் ரவி சீனுவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் மணிமாறன், பழனிசாமி, சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் பற்றி தகவல் கிடைத்தவுடன் உருளையன்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என கேட்டனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஆத்மி கட்சியினரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி விடுவித்தனர்.

மேலும் செய்திகள்