முக்கிய செய்திகள்:
பாஜகவுக்கு தமிழருவி மணியன் எச்சரிக்கை

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை எதிர்த்து காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு வழங்கும் போர்வையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்ற போதும், தமிழின விரோத செயல்களில் ஈடுபட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மன்மோகன் சிங் இருமுறை பதவியேற்ற போதும் இப்படி ஓர் அழைப்பு அனுப்பப்படவில்லை. ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவிற்கு ரத்தினக் கம்பளம் விரித்து கடந்த காலங்களில் வரவேற்பு அளித்த பாவத்திற்குத்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அதிபருக்கு எதிராகவும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வழங்கி வந்ததனால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு கனிந்தது. இக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவை.

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றவாளியாக நிறுத்தி தண்டனைக்குட்படுத்த வேண்டும் என்பதுதான் வைகோ, மருத்துவர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரின் முக்கியமான கோரிக்கையாகும்.

ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காங்கிரஸின் பழைய அடிச்சுவட்டிலேயே தடம் மாறாமல் சுவடு பதித்து மோடி அரசும் நடக்கும் என்ற மோடியின் எதிர்ப்பாளர்களின் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் காரியத்தில் பா.ஜ.க., ஈடுபட்டிருப்பது வேதனையைத் தருகிறது.

1987-ல் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட 13-வது சட்ட திருத்தத்தின்படி உருப்படியான ஒரு அரசியல் நடவடிக்கையும் இன்று வரை எடுக்க ஈடுபடவில்லை. கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு பொருட்டாக மதிக்காமல் அலட்சியப் படுத்திய இலங்கை அரசு மோடி பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் ஒழுங்காக வாலைச் சுருட்டிக்கொண்டு ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை தரும் நடவடிக்கைளில் ஈடுபடும் என்று தமிழினம் நம்பியது.

மயிலிறகால் இலங்கை அரசின் முதுகில் தடவிக் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு தீர்வையும் உருவாக்க முடியாது என்பதுதான் கடந்த காலம் நமக்கு உணர்த்தியிருக்கும் கசப்பான பாடம். மோடி அரசு, மன்மோகன் அரசைப் போன்றே ராஜபக்சேவிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் வந்து வாய்க்காது.

தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் வெளிப்பாடுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. 75 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த கூட்டணி, 2016-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி எழுச்சியுடன் பயணிப்பதற்கு எதிராக முதல் தடைக்கல்லை ராஜபக்சேவிற்கு அளித்த அழைப்பின் மூலம் மத்திய பா.ஜ.க., உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் தே.ஜ.கூட்டணி சிதையும். காங்கிரசுக்கு கிடைத்த மோசமான அனுபவத்தை பா.ஜ.க.,வும் அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இருந்தால், 5.5% வாக்குகளை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாகப் பெற்றிருக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் வேரூன்றி வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் தமிழினத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் காரியங்களை மோடி அரசு தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆரோக்கியமான முறையில் வளரத் தொடங்கியிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதற்குப் பதிலாக கள்ளிப்பால் வழங்கும் காரியத்தை எந்த நிலையிலும் மோடி அரசு செய்யாமல் இருப்பதற்கு, உரிய விழிப்புணர்வுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்