முக்கிய செய்திகள்:
இலங்கையுடன் நட்புறவில் இருப்பதுதான் இந்தியாவிற்கு நல்லது : தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் கூறும்போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை, 13-வது அரசியல் சட்டம் நிறைவேற்றம், போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கை இவை எல்லாம் தேவை என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே மாற்று கருத்து இருக்க

முடியாது. அதேநேரத்தில் இவையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் இலங்கை அதிபருடன் தான் பேச வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை என்பது நம்முடைய அண்டை நாடு. தெற்காசிய கூட்டமைப்பில் இலங்கை அங்கம் வகிக்கும் ஒரு நாடு. இலங்கையுடன் நட்புறவில் இருப்பதுதான் இந்தியாவிற்கு நல்லது. அதுதான் ராஜதந்திரம். அதேநேரத்தில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு செய்து வந்தது போல புதிய அரசும் அந்தப் பணியை செய்யும் என நம்புகிறேன்" என்றார்.

இலங்கை அதிபரின் வருகைக்கு வைகோ எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேட்டதற்கு, "தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் இலங்கை விவகாரத்தில், இலங்கை தமிழர்களின் நன்மை என்பதை விட, உணர்ச்சியின்பால் தான் பேசுகிறார்கள் என்பது நாம் அறிந்தது.

ஒரு வித்தியாசம் என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது இந்திய எல்லைக்கு மேலே ராஜபக்சே விமானம் பறந்தபோது கீழே இருந்து கருப்புக் கொடி காட்டினர். ஆனால் இப்போது ஒரு கட்சியோ இதுபற்றி கருத்து சொல்ல ஒரு நாள் வாய்தா கேட்கிறது. இன்னொரு கட்சித் தலைவரோ கையெடுத்துக் கும்பிட்டு, இது வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார்" என்றார் ஞானதேசிகன்.

மேலும் செய்திகள்