முக்கிய செய்திகள்:
தனியார் என்ஜி. கல்லூரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் பூபாலசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும், ஒரே பெயரில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இதனால், சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, ஒரே பெயரில் உள்ள கல்லூரிகளின் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு தனியார் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு வசதிகள், தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஏற்கனவே ஒரு இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து, அதன் தீர்ப்பை தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் நேற்று பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், ‘ஒரே பெயரில் என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கவுன்சிலிங் தொடங்க உள்ளதால், தமிழகத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கடந்த கல்வி ஆண்டின் மாணவர்கள் தேர்ச்சி விகிதம், தரவரிசை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய இணைய தளத்தில் உடனடியாக வெளியிடவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்