முக்கிய செய்திகள்:
போலீஸ் நிலையத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமம், தமிழ் நாடு தேயிலை தோட்ட கழகத்தின் மூன்றாவது சரகத்தில் 8.5.2014 அன்று காற்றுடன் பலத்த மழை பெய்த போது ஆலமரம் சாய்ந்து விழுந்ததில், அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜானகி, மகேஸ்வரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜானகி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் சீதாலட்சுமி பலத்த காயமடைந்துள்ளார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜானகி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த திருமதி சீதாலட்சுமிக்கு 25,000 ரூபாயும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

விழுப்புரம் ரெயில் நிலைய நடைமேடைகளில் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை விற்பனை செய்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், கவுண்டனூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஜெயவேலு, 7.5.2014 அன்று அசாரியா என்பவரின் பொருளுடமைகளை அபகரித்தது தொடர்பாக காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியினை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயவேலுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயவேலுவின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ரெயில்வே காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து குற்றவியல் விசாரணைக்கு உத்திர விடப்பட்டுள்ளது. இவ் விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்