முக்கிய செய்திகள்:
பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை, பெண்கள் மாநாடு மற்றும் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு தென்தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பெண்களை அழைத்து 1008 திருவிளக்கு பூஜை, பெண்கள் மாநாடு மற்றும் ஊர்வலம் கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு விவேகானந்த கேந்திர அரங்கத்தில் பஜனையுடன் பெண்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை தூத்துக்குடி பண்டாரவிளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை பட்டுக்கனி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் விவேகானந்த கேந்திர அகில பாரத உதவி தலைவர் நிவேதிதா, அகில பாரத உதவி பொதுச் செயலாளர் ரேகா தவே, விவேகானந்த கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெண்கள் மாநாட்டில் பேசினர். அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் இருந்து பெண்கள் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை ரேகா தவே தொடங்கிவைத்தார்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலைச் சென்றடைந்தது. அங்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்