முக்கிய செய்திகள்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : -

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தீர்ப்பளித்த உடன், அதுகுறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டபோது, "முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது" என்று பதில் அளித்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் சில செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசும், கேரள அரசும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், 14.2.1998 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதுதான் உச்சநீதி மன்றம் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் 27–2-2006 அன்று உத்தரவிட்டதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையில் திசை திருப்பிட முயற்சித்திருக்கிறார்.

25.9.2006 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் இரு மாநில அரசுகளும், மத்திய அரசு முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி, இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியது. அதன்படி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையில் 29.11.2006 அன்று நானும் கேரள மாநில முதல்–அமைச்சர் அச்சுதானந்தன் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அந்தப் பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வழங்கிய யோசனையின் அடிப்படையில், மீண்டும் கேரள அரசுடன் 19.12.2007 அன்று டெல்லி தமிடிநநாடு இல்லத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவேதும் எட்டப்படவில்லை.

தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்திலும், இல்லாத நேரத்திலும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது.

இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு தற்போது ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எந்தவிதமான நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்றும் கேரள அரசின் சட்டத் திருத்தத்திற்கு நான் மதிப்பளித்தேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேபி அணையைப் பலப்படுத்தினால், அணையின் நீர் மட்டத்தை, 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது.

ஆனால் அதனை செயல்படுத்தாமல் 17 நாட்கள் அ.தி.மு.க. அரசு காலந்தாழ்த்தியது. இதைப் பயன்படுத்தி கேரள சட்டமன்றத்தில் அணைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தனர். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, ஆய்வு, வாதம் என வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியாக 2006–ல் வழங்கிய அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் வழங்கியுள்ளது.

தாமதமாகக் கிடைத்த இந்த நீதிக்கு, பாராட்டு விழா நடத்துவது முக்கியமல்ல. தீர்ப்பு நகலைப் பெற்று, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு உடனே செயல்படுத்த வேண்டும். அணையில் 142 அடிக்குத் தண்ணீர் தேங்காத அளவுக்கு மதகுகள், 152 அடிக்கு மேல் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த மதகுகளை உடனே 136 அடிக்கு இறக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெரியாறு– வைகை விவசாயிகளின் அவசர அவசியத்தையும்; "அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம்" என்று 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப் பிடப்பட்டிருப்பதையும்; ஆழ்ந்து கவனித்து அவசர நட வடிக்கைகளை மேற்கொள் வதற்கான முயற்சிகளை ஜெயலலிதா முனைப்போடு மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாமல் தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டு, பயனற்ற முறையில் காலத்தைக் கடத்தி, நீண்ட காலமாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்குப் பாசன நீரையும், பொதுமக்களுக்கு குடிநீரையும் வழங்குவதைத் தாமதப்படுத்திவிடக் கூடாது என்றே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலே உள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்