முக்கிய செய்திகள்:
முல்லைப் பெரியாறு தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது: கருணாநிதி

முல்லைப் பெரியாறு தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கிய அணை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பல கேள்வி களுக்கும் அவர் பதிலளித்தார்.

உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?

"முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. கேரளா தடுப்பு அணை கட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களுக்குள் தற்போது நான் நுழைய விரும்பவில்லை. விவரங்கள் தேவையென்றால், முல்லைப் பெரியாறு பற்றி அறிய வேண்டுமேயானால், இதோ இங்கே முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்”; அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்."

தேர்தல் ஆணையத்திடம் தி.மு. கழகத்தின் சார்பில் பல புகார்களைக் கொடுத்திருக்கிறீர்களே, ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

"இதுவரையில் எடுக்கவில்லை."

ஜல்லிக்கட்டு பற்றி உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறதே?

"தீர்ப்பு பற்றிய முழு விவரம் வரவில்லை. எனவே அது பற்றி இப்போது கூறுவதற்கில்லை."

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து..

"தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவில் இல்லை."

மேலும் செய்திகள்