முக்கிய செய்திகள்:
சென்னை இரட்டை குண்டுவெடிப்பு: பெங்களூரு விரைந்தது சிபிசிஐடி விசாரணைக் குழு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பெங்களூரு விரைந்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1ம்  (வியாழக்கிழமை) கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சென்னை குண்டுவெடிப்பு தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து இயங்கும் தீவிரவாத ஸ்லீப்பர் செல்கள் உதவி செய்திருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கொடுத்த தகவல்: "இதுவரை மேற்கொண்டு விசாரணை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த வெடிகுண்டுகள் டைமர் கருவிகளுடன் பெங்களூரில் தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

சம்பவம் குறித்து அண்டை மாநில காவல்துறையினரிடமும் தகவல் கோரியுள்ளதாகவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி வீடியோ பதிவுகளையும் கண்காணித்து வருவதாகவும் சிபிசிஐடி விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்துவதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் சென்னை வந்துள்ளனர். கர்னல். பாலகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

குண்டுவெடிப்பால் சேதமடைந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளை முழுமையாக சோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்