முக்கிய செய்திகள்:
தீவிரவாதி ஜாகீர் உசேன் சென்னையில் கைது

சென்னையில் பயங்கர சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, சென்னையில் மண்ணடி, பெரியமேடு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி மிக மிக ரகசியமாக கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இலங்கை கண்டியை சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் என்பவன் மண்ணடி பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவனை சுற்றி வளைத்து பிடிக்க கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக நேற்று இரவு அவர்கள் தங்களது ஆபரேசனை தொடங்கினர். மண்ணடியில் ஜாகீர் உசேன் தங்கியிருந்த லாட்ஜில் வைத்து அவனை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக அப்பகுதியில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர். இந்த நேரத்தில் ஜாகீர் உசேன், அங்கிருந்து ஆட்டோவில் வெளியில் புறப்பட்டான். திருவல்லிக்கேணியை நோக்கி ஆட்டோ சென்றது. கியூ பிரிவு போலீசாரும் சத்தமில்லாமல் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றனர்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை சென்றடைந்ததும், ஆட்டோவில் இருந்து ஜாகீர் உசேன் இறங்கினான். அப்போது போலீசார் அதிரடியாக அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஜாகீர் உசேனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவனிடம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் வரைபடம், சேட்டிலைட் போன்கள், கள்ள நோட்டுகள் ஆகியவை இருந்தன. இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பயங்கர சதி திட்டத்துடன் சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:–

இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேனை அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலரே மூளைச் சலவை செய்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங் களை நிகழ்த்துவதற்கு தயார் படுத்தி உள்ளனர். குறிப்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாசவேலையில் ஈடுபடுவதற்கு ஜாகீர் உசேனுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரில் எந்தெந்த பகுதிகளில் எப்படி குண்டுகளை வைக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக கடந்த ஓராண்டுக்கு மேல் ஜாகீர் உசேன், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சதிச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன், மாதத்துக்கு 3 முறை அவன் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளான். சென்னை மாநகரை நாசக் காடாக்குவதற்காக இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து மனதை மாற்றுவதற்கும் ஜாகீர் உசேன் திட்ட மிட்டிருந்தான். இதற்கு சென்னையில் மறைமுகமாக முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜாகீர் உசேனுக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் கியூ பிரிவு போலீசார் கருதுகிறார்கள்.

இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. ஜாகீர் உசேனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 சேட்டிலைட் செல்போன் களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சங்கேத வார்த்தைகளுடன், யாருக்கும் புரியாத வகையில் ஏராளமான குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) குவிந்து கிடந்தன. இதனை அனுப்பியவர்கள் யார்? என்பது பற்றியும் நுணுக்கமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா விசாவில் சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற ஜாகீர் உசேனின் பாஸ்போர்ட்டையும் போலீசார் முடக்கியுள்ளனர். இதை தொடர்ந்து ஜாகீர் உசேன் மீது 120–பி (கூட்டு சதி), 480 (சட்டவிரோதமாக ஆவணங்களை வைத்திருத்தல்) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவனை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலரின் சதி திட்டத்துடன் சென்னைக்குள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் ஜாகீர் உசேனுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஜாகீர் உசேன் தனி ஆளாக நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்க முடியாது என்றும், அவனது பின்னணியில் மிகப்பெரிய அளவில் சதிக்கும்பலின் ‘நெட் வொர்க் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இதுபற்றி தீவிரவாதி ஜாகீர் உசேனிடம் விரிவாக விசாரணை நடத்தவும் கியூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஜாகீர் உசேனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7 நாட்கள் அவனை காவலில் வைத்து விசாரிக்க கியூ பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படுகிறது. போலீஸ் காவலில் வைத்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தப்படும் போது, சென்னையில் நாச வேலையில் ஈடுபடுவதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்–யார்? என்பது பற்றிய தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவது பற்றியும் சட்ட நிபுணர்களுடன் கியூ பிரிவு போலீசார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பயங்கர சதிதிட்டத்துடன் சென்னை மாநகருக்குள் ஊடுருவிய தீவிரவாதியை சரியான நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்திருப்பதன் மூலம் மிகப்பெரிய நாச வேலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்