முக்கிய செய்திகள்:
ராணுவ மரியாதையுடன் மேஜர் முகுந்த் உடல் தகனம்

காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.

இதில், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேஜர் முகுந்த் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து இரவு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நள்ளிரவில் வந்து அடைந்தது. அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், இன்று ராணுவ மருத்துவமனையில் இருந்து காலையில் அவரது பெற்றோர் குடியிருக்கும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள புரொபஸர்ஸ் காலனிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, முழு ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் மேஜர் முகுந்த் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் சொந்த ஊர் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு. சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம். படித்து முடித்து, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியல் துறையில் முதுகலை படித்து முடித்தார்.

பின்னர், சென்னை ராணுவப் பள்ளியில் சேர்ந்து 2004-ம் ஆண்டு பயிற்சி முடித்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தவர்.

முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து. இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இந்து, பெங்களூரில் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கிருந்து தற்போது சென்னை வந்து சேர்ந்துள்ளார். அவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை அர்சியா உள்ளார்.

மேலும் செய்திகள்