முக்கிய செய்திகள்:
அழகிரி ஆதரவாளர்கள் திமுகவிலிருந்து திடீர் சஸ்பெண்ட்

மதுரையில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாநகர திமுக நிர்வாகிகள் அமைப்பு கலைக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கும் கட்சித் தலைமைக்கும் மோதல் ஏற்பட்டது. கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அழகிரியை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர். அதன்பிறகும் கட்சிக்கு எதிராக பேசி வந்ததால், கடந்த மார்ச் 25-ம் தேதி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அழகிரி, ஊர் ஊராக சென்று தனது ஆதர வாளர்களை சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோற்பார்கள் என்று கூறிய அழகிரி, அதற்காக தனது ஆதரவாளர்கள் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஆதர வாக வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அழகிரி ஆதரவா ளர்கள் 10 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு உறுப்பினர் கள் ஆர்.எம்.கருப்பசாமி, டி.சுப்பு லட்சுமி மற்றும் எம்.உதயகுமார், மிசா எம்.பாண்டியன், என்.சிவக்குமார், ப.கோபிநாதன், வி.என்.முருகன், ஆர்.எஸ்.ராமலிங்கம், க.இசக்கிமுத்து, முன்னாள் எம்எல்ஏ எஸ்.கவுஸ்பாட்சா ஆகிய 10 பேர் கட்சியின் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படு வதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்கள், திமுக வேட்பாளர்களுக்கு உரிய ஒத்து ழைப்பு தராததுடன், அவர்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. அதனடிப் படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்