முக்கிய செய்திகள்:
கொடைக்கானலில் குடிநீர் தட்டுபாடு : சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்கவரும் உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாமலும் பல சிரமங்களை சரமங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இந்தச் சூழலில், கொடைக்கானலில் பகலில் மிதமான வெயிலும், காலை மாலை நேரத்தில் இதமான சாரலுடன் கூடிய குளுகுளு சீசனும் தொடங்கியுள்ளன. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா நகராக விளங்கினாலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நகரில் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது ஒரே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருவதால் நகரின் முக்கியச் சாலைகளில் திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் நிறுத்திச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியில் வாகன பார்க்கிங் வசதி அமைக்க நகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுந்தொலைவில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள், வந்ததும் காலைக் கடன்களை முடிக்க போதுமான கட்டணம் மற்றும் இலவசக் கழிப்பிட வசதியில்லாமல் பரிதவிக்கின்றனர்.

கொடைக்கானலில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், சுற்றுலா பயணிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் விலை கொடுத்தே வாங்கிக் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு இல்லாத போலி குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது.

 

மேலும் செய்திகள்