முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்த இறுதி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், 39 தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.07% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.4% வாக்குகளும் பதிவாகின. தருமபுரியில் அதிகபட்சமாக 81.58% ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

மொத்தம் பதிவான 73.67 சதவீத வாக்குகளில், ஆண்கள் 73.49%, பெண்கள் 73.85%, மூன்றாம் பாலினத்தவர் 12.72% என்ற அளவில் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 73.67% வாக்குகள் என்பது, கடந்த 2009-ம் மக்களவைத் தேர்தலை காட்டிலும் 0.69% உயர்ந்துள்ளது என்பது கவனிக்கதக்கது.

மேலும் செய்திகள்