முக்கிய செய்திகள்:
கருணாநிதி, ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பி.வி.செல்வகுமார், திருமாறன், திவாகர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெய லலிதாவுக்கு எதிராக பெங்களூரில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகாததால் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய் துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டம் வளைக்கப் படுகிறது என்று கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து அறிக்கைகள் அளித்துள்ளார்.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 25-ம் தேதி வெளிவரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதை விமர்சித்துள்ளார்.

இதன்மூலம் நீதித்துறையை கருணாநிதி களங்கப்படுத்தி உள்ளார். நீதிபதியை அரசியலுக்கு இழுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். திமுக-வை தடை செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்