முக்கிய செய்திகள்:
மத்தியில் ஒரு மாற்றத்தை உருவாக்கியே தீர வேண்டும் : சரத்குமார் அறிக்கை

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நம் இந்திய திருநாட்டின் 16–வது நாடாளுமன்ற தேர்தலில் நாளை வாக்களிக்க இருக்கின்றோம். ஊழல், மதசார்பு இரண்டுமே நம் நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிடும்.

உலகத்தில் மிகப்பெரிய ஊழல்களைச் செய்துள்ள காங்கிரஸ் கட்சியும், மத சார்புடைய பா.ஜ.கவும் மத்தியில் ஆட்சி புரிந்துள்ளார்கள். மாறி, மாறி அதிகாரத்திற்கு வந்தபோது செய்யாததை, இப்போது செய்யப்போகிறோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

மத்தியில் ஒரு மாற்றத்தை உருவாக்கியே தீர வேண்டும். அந்த மாற்றம் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும், நன்மைபயக்கக் கூடியதாக அமைந்திட வேண்டும். தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது, இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுகிறபோது கூட தேவைக்கு நிதி அளிக்காதது, காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், பா.ஜ.க வின் மாற்றாந்தாய் போக்கு, ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தது.

நம் மீனவர்கள் பிரச்சினையைக் கண்டு கொள்ளாதது, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்காதது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வசதிக்கு மின்வழித்தடங்கள் அமைக்காமல் குறுக்கே நிற்பது என தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

17 ஆண்டுகள், அதில் 14 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய ஆட்சியில் பதவி சுகம் கண்ட தி,மு,க ஊழலில் சாதனை புரிந்துள்ளார்களே ஒழிய தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்தத் திட்டத்தையும் ஆக்கப் பூர்வமாக செய்திடவில்லை.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த 26 ஆம் தேதி முதல் நேற்று மாலை 6 மணிக்கு ஆம்பூர் நகரில் பிரச்சாரத்தை முடிக்கிற வரை இரட்டை இலைக்கே வாக்களிப்போம் என்ற எழுச்சியை அனைத்து இடங்களிலும் காண முடிந்தது.

அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு தொலை நோக்குத் திட்டங்களுடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதே போன்று முதல்–அமைச்சர் சுட்டிக்காட்டுகிற ஆட்சி மத்தியில் அமைகிறபோது நம் தமிழகம் லாபம் பெறும். பாரதம் உயரும். தமிழகத்தின் உரிமையை, தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டுகிற சக்தி முதல்–அமைச்சர் புரட்சித்தலைவியிடம் இருக்கிறது.

எனவே, ஊழலற்ற, மதசார் பற்ற ஆட்சி உருவாக்கிட, சிறுபான்மையினர் நலன் உண்மையாகவே பேணிக் காக்கப்பட தமிழக மக்கள் சிந்தித்து ‘‘இரட்டை இலைக்கே" வாக்களிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்