முக்கிய செய்திகள்:
நாளை தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் உட்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை (24–ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டது. குறிப்பாக எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அனைவரும் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 1589 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 6 ஆயிரத்து 663 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 100 மையங்களில் 10–க்கும் மேற்பட்ட சாவடிகளும், பல மையங்களில் 15–க்கும் அதிகமான சாவடிகளும் உள்ளன. இவற்றில் 455 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தலின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக 489 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள்.

தேர்தலையொட்டி, குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் கடந்த சில வாரங்களாக இரவு ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதில், இது வரை 1407 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 1343 குற்றவாளிகளும் சிக்கியுள்ளனர். 158 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதட்டமான சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கம்பெனி துணை ராணுவ படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

ஊர்க்காவல் படையினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாருடன் சேர்த்து தேர்தல் பணியில் மொத்தம் 23 ஆயிரத்து 850 போலீசார் சென்னையில் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்